வாயுவேகம், மனோவேகம் என்பர். அதாவது காற்று எவ்வாறு ஓரிடத்தில் நிலையாக இராமல் சுற்றிச் சுழன்று வீசுமோ, அவ்வாறே மனிதன் எண்ணங்களும் வேகமாக அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.

ஒன்று தொட்டு ஒன்று என எண்ணங்களின் மீள்நீட்சி சென்றுகொண்டே இருக்கும்.

Advertisment

எண்ணங்கள் என்பது என்ன? ஒருவரின் ஆசைகள், லட்சியங்கள், திட்டங்கள், எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டுச் சிந்தனைகள், சிலசமயம் நல்ல எண்ணம், சிலசமயம் கெட்ட எண்ணம், சிலசமயம் சமூகத்துக்கு ஒவ்வாத எண்ணம், அபிப்ராயம், சிலசமயம் சீரிய யோசனைகள் என ஒரு மனிதன் ஒவ்வொரு நொடியும் யோசித்துக்கொண்டே இருக்கிறான்.

இது வயதுக்கேற்ற யோசனை, எண்ணங்களாகவும் அமையும்.

ஜோதிடத்தில் ஒருவரின் எண்ணங்களைப் பற்றிக்கூறும் இடம் 5-ஆமிடமாகும். 5-ஆமிடம், அதன் அதிபதி, 5-ஆமிடத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம் என இதனைப் பொருத்து சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

சரி; இத்தனை யோசனைகள், சிந்தனைகள், லட்சியங்கள், விருப்பங்கள், தாபங்கள் அனைத்தும் நிறைவேறுமா? எண்ணியது எண்ணியாங்கே பலிதமாகுமா? இதனை நிர்ணயித்துக்கூறுமிடம் 5-ஆமிடத்துக்கு 7-ஆமிடமான 11-ஆமிடம். ஆக ஒரு மனிதன் அனைத்துக்கும் ஆசைப்படலாம். ஆனால் அது நிறைவேறுமா, காலதாமதமாகுமா? ஆசைக்கு எதிரான செயல்கள் நடக்குமா? ஆசையே நிறைவேறாதா என இத்தனை விஷயங்களையும் 11-ஆமிடம் தெளிவாகக் கூறும். அதுவும் நமது எண்ணங்கள் தர்மவழியில் நிறைவேறுமா? அதர்மவழியில் நிறைவேறுமா என்பதையும் 11-ஆமிடம் அறுதியிட்டுக் கூறிவிடும்.

11-ஆமிட அதிபதியும் ஆசைகள் நிறைவேறும் விதமும்

Advertisment

11-ஆமிட அதிபதி உச்சமானால், நமது லட்சியங்கள் பூத் தொடுப்பதுபோல் எளிதாக, விரைவாக நிறைவேறும்.

11-ஆமிட அதிபதி ஆட்சியானால் நமது ஆசைகள், அளவிடா முறையில் அழகாக நிறைவேறும்.

11-ஆம் அதிபதி சுப வர்க்கோத்தமம் பெற்றால் சுலபமாக எண்ணம் நிறைவேறும்.

11-ஆம் அதிபதி நீசம்பெற்றால் நினைவுகள் நிறைவேறுவது கடினம்.

11-ஆம் அதிபதி பகை, நீசம் பெற்று, 6, 8, 12-ல் இருப்பின் எந்த முயற்சியிலும் லாபம் இல்லை.

Advertisment

லக்னாதிபதியும், 11-ஆம் அதிபதியும் பகை கிரகங்களாக அமையும்போது பகைவர்களுடன் முட்டி மோதி, யோசனைகளை நிறைவேற்றுவார்கள்.

11-ஆம் அதிபதி நீச வர்க்கோத்தமம் பெற்றால் சிந்திக்காமலிருப்பது உத்தமம். என்ன யோசனை என்றாலும் எதுவும் நிறைவேறாது. நாளடைவில், "இவன் ஒன்னு சொன்னாலே விளங்கமாட்டேங்குது' என ஒதுக்கித்தள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

11-ஆமிடம் லாபத்தைக் குறிக்கும். பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை லாபமடைவது என்பதை நோக்கித்தான் பயணப்படும். எனவே இங்கே சிந்தனை பலிப்பதென்பது ஒருவரின் லாபக்கணக்கையும் குறிக்கும்.v இனி, 12 ராசியினருக்கும், அவர்களின் எண்ணமும், லட்சிய பலிதமும், லாபப் பெருக்கமும் எப்படி இருக்குமென்று காண்போம்.

மேஷம்

இவர்கள் ராசியின் எண்ணத்தை நிறைவேற்றும் ராசி கும்பம்; அதிபதி சனி. சனி எப்போதும் மந்தகிரகம்தான். ஆனாலும் அவர் ஒரு ஸ்திர கிரகம். எனவே சனி ஓரையில் வாங்கும் பொருட்களை அவர்களின் வம்சாவளிகளும் அனுபவிப்பர் என்பர். சனி மந்தன் ஆதலால், இவர்களின் நோக்கங்கள் சற்று மெதுவாகத்தான் நிறைவேறும். நிதானமாகத்தான் லாப வரவை அனுபவிப்பார்கள். அதனால் லட்சியங்கள் சற்றே மெத்தனமாக நிறைவேறுவதால், லாப முன்னேற்றமும் கொஞ்சம் தாமதமாகவே அமையும். எனினும் தீர்க்கமாக இருக்கும். முயல், ஆமை கதைபோல், நிதானமாகச் சென்றாலும் எண்ணம் நிறைவேறிவிடும். அதனால்தான் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், நிறைகுடமாக திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற்றுவிடுவார்கள். அரசு தொடர்பாக உச்சமான பதவிகளே இவர்களின் லட்சியமாக இருக்கும்.

11-ஆம் அதிபதி 7-ஆமிடத்தில் உச்சமாவார். எனவே இவர்களின் எண்ணங்கள், லட்சியங்களை நிறைவேற்ற ஒரு தொண்டர் படையே காத்துக்கொண்டிருக்கும். மனிதர்களின் தொடர்பால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். சிலசமயம் அதர்மவழியிலும் லட்சியம் நிறைவேறும்..

இவர்களின் 11-ஆம் அதிபதி நீசம் பெற்றால், அந்தோ பரிதாபம்.

ஏனெனில் ராசியிலேயே நீசம்பெறுவார். வாழ்க்கைத் தோல்விகளுக்கும், எண்ணங்களின் சறுக்கலுக்கும் இவர்களே காரணமாகிவிடுவார்கள். என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேறாமல் போய்விடும். அதிர்ஷ்டம், லாபம் என்பது இவர்கள் இருக்கும் ஏரியாவுக்குள்கூட வராது. நாளடைவில் தன்னைத்தானே நொந்துகொண்டு, சுய கழிவிரக்கம் கொள்வார்கள்.

இவ்வாறு 11-ஆம் அதிபதி சனி நீசமான அன்பர்கள் ஓடிப்போய் ஆஞ்சனேயரின் பாதங்களை இறுகப்பற்றுங்கள். இன்னுமொரு பலமான பரிகாரம்- கோவில்களையும், குளங்களையும், அருகிலுள்ள ஏரிகளையும் முடிந்த அளவு சுத்தப்படுத்துங்கள். நீர்நிலைகளின் அசுத்தம் குறையும்போது, உங்களின் துரதிர்ஷ்டமும் குறைய ஆரம்பிக்கும். ஐயப்பனை வணங்கவும்.

venkat

ரிஷபம்

ரிஷப ராசிக்கு எண்ணங்கள், லட்சியங்கள் உருவாகும் இடம் கன்னி ராசி. இதன் அதிபதி புதன். புதன் எப்போதும் சிந்தனைக்குரிய கிரகம்தான். அவரே 5-ஆம் அதிபதியாக வரும்போது, யோசனைக்குக் குறைவே இருக்காது. குடும்பம், செல்வம், வாக்கு, புத்திசாலித்தனமான வியாபாரம் இவை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அத்தனை சிந்தனையும் சிறகடித்து நிறைவேறும். 11-ஆமிடம் மீனம். அதன் அதிபதி குரு. புதன் ஒரு சிந்தனை கிரகம். அவை நிறைவேறும் இடம் ஒழுக்கத்துக்குரிய குரு வீடு. எனவே கூடுமானவரை ரிஷப ராசியினர் தங்கள் ஆசைகளை ஒரு நேர்க்கோட்டில், சட்டத்துக்குட்பட்டு, ஒழுக்கமாக நிறைவேற்றுவர். ரிஷப ராசியின் 11-ஆம் அதிபதி குரு உச்சமானால் லட்சியங்களை நன்கு திட்டம்தீட்டி நிறைவேற்றுவார்கள். இதில் இன்னொரு விஷயம்- குரு ரிஷப ராசியினரின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி மட்டுமல்ல; 8-ஆமிட அதிபதியும் ஆவார். இதனால் இவர்களின் லட்சியங்களை நிறைவேற்றும்போது, சட்டத்தின் ஓட்டை உடைசலைக் கண்டுபிடித்து, அதன்வழியாகவெல்லாம் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். கேட்டால் "சட்டப்படிதான் நடக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சமும் அஞ்சாமல் சொல்வார்கள். குருவே 8-ஆம் அதிபதியாகி, அவரே 11-ன் அதிபதியும் ஆகும்போது, தப்புத்தண்டாக்களை ஆல்டர் செய்து அதனை நியாயப்படுத்தியும் விடுவார்கள். தங்கள் லட்சியம் நிறைவேற இளைய சகோதரர்கள், வேலையாட்கள் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். 11-ஆம் அதிபதி 11-ல் ஆட்சியாக இருப்பினும் எண்ணம் நிறைவேற ஒரு தடையுமில்லை.இதே குரு 8-ல் ஆட்சி பெற்றால் கதை சற்று கந்தல்தான். ஒன்று, ஆசைகள் நிறைவேற பெரிய பெரிய தடைகள், எதிர்ப்புகள் வரும். அல்லது லட்சியங்களை முறையற்றவழியில் நிறைவேற்றிக் கொள்வார்கள். அதில் நிறைய சட்டத்திற்கு விரோதமான விஷயங்கள் இருக்கும். அதனைப் பூசி மெழுகிவிடுவார்கள்.11-ஆம் அதிபதி குரு நீசமானால், என்ன சொல்ல? 11-ஆமிடம் லாப ஸ்தானம். 9-ஆமிடம் அதிர்ஷ்டத்துக்குரிய இடம். இவ்வாறு ஒரு லாபாதிபதி ஒரு அதிர்ஷ்ட இடத்தில் நீசமாகி மறைந்தால் லட்சியம் நிறைவேறாததால் அதிர்ஷ்டம் இல்லையா? அதிர்ஷ்டம் இல்லாததால் எண்ணம் நிறைவேறவில்லையா என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இந்த நிலையில் ரிஷபத்தாருக்கு எண்ண அதிபதி- 5-ஆம் அதிபதி புதன் 11-ல் நீசம். இந்நிலை இருந்தால் சொல்ல என்ன இருக்கிறது? உருப்படாத யோசனைகள்தான் வரும் என்று சொல்லலாமா அல்லது விளங்காத விஷயத்தைத்தான் யோசிப்பார் என்று சொல்லலாமா? ஏதோ ஒன்று.இவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் அதிபதி குரு நீசமானால், சிவனின் பாதக்கமலம் பணியுங்கள். சிவனின் எந்த மந்திரம் சொல்ல முடியுமோ, அதனை தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள். "ஓம் நமசிவாய' என்று முடிந்த மட்டும் சொல்லுங்கள். இயன்றபோதெல்லாம் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் எண்ணியது எண்ணியாங்கே நடக்கும். வசதி குறைந்த அந்தணர்களுக்கு, ஏழ்மை நிலையிலுள்ள சிறுவர்களுக்கு, கர்ப்பச்சிதைவடைந்த பெண்களுக்கு, கல்வி தடைப்பட்டவர்களுக்கு உணவு, ஆடை, மருந்துகள், புத்தகம் வாங்கிக்கொடுங்கள். இருளான கோவில்களில் எத்தனை விளக்கு ஏற்றுகிறீர்களோ, அத்தனை அளவு எண்ணம் ஈடேறும்.

மிதுனம்

மிதுன ராசியின் சிந்தனை ராசி துலாம். அதிபதி சுக்கிரன். கேட்கவே வேண்டாம். யோசனைகள்கூட அழகாகத்தான் தோன்றும். எல்லாரையும்விட ஒருபடி அதிக யோசனைகள் வரும். வெளிநாடு செல்ல, நிறைய முதலீடு செய்ய, நிறைய செலவு செய்ய என லட்சியம் வரும்.இவர்களின் அத்தனை அவாக்களையும், டாம்பீகமான ஐடியாக்களையும் நிறைவேற்றும் இடம் மேஷம். அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் 11-ல் ஆட்சியாக இருந்தால் நினைத்தது நிறைவேறும். அவரின் இன்னொரு வீடான 6-ல் ஆட்சி பெற்றாலும் எண்ணம் நிறைவேற கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கடன், கொஞ்சம் வம்பு வழக்கு என எல்லாம் கலந்துகட்டி, எதையாவது செய்து நினைத்ததை முடித்துவிடுவார்கள்.செவ்வாய் உச்சமானால் என்ன நல்ல பலன்? மிதுனத்தார் நினைத்ததற்குமேல் பலமடங்கு நடக்குமல்லவா என்றால், அல்ல! அவர் மிதுனத்தில் 8-ஆமிடத்தில் அல்லவா உச்சமாவார். ஒரு அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தால் அழகு. அதே அரசன் பதுங்கு குழியில் போய் உட்கார்ந்தால் என்ன சொல்வது?அதே கதைதான். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அதிபதி 8-ல் மறைவது, உச்சமாவது- இவர்களின் உயரிய சிந்தனைகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனாலும் கிரகம் செவ்வாய் ஆதலால் ஏதேனும் மறைவு, சட்டப்புறம்பான வழிகள்மூலம் எண்ணங்களை நிறைவேறச் செய்துவிடுவார். செவ்வாய் உச்சமானால், எண்ணங்கள் நேர்வழியில் நிறைவேற வாய்ப்புக் குறைவு. இதே 11-ஆம் அதிபதி செவ்வாய் 2-ஆமிடத்தில் நீசமடைவார். எனவே இவர்கள் என்ன யோசித்தாலும் இவர்களின் வார்த்தைகளே நிறைவேறவிடாமல் செய்துவிடும். தங்கள் அழகான லட்சியங்களைப் பேசிப்பேசியே கெடுத்துவிடுவார்கள். இவர்கள் குடும்பத்தார் நாளடைவில், "நீ பேசாமல் இரு; அதுபோதும். பேசினாலே நடக்கிறதுகூட நடக்காமல் போகிறது' என கரித்துக்கொட்ட ஆரம்பித்துவிடுவாôகள். இதனை நீசச்செவ்வாய் சரியாகச் செய்வார்.

இவர்களின் எண்ணங்கள், லட்சியங்கள் ஓரளவாவது நிறைவேறுவதற்கு, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடவேண்டும்.

மிதுனத்தாரின் செவ்வாய் நீசமானால், வாய்பேச முடியாத குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, தங்களால் முடிந்த உணவுப்பொருட்கள், சமையல் பொருட்கள் வாங்கிக்கொடுங்கள். இளம்வயதுப் பையனுக்கு சிவப்பு நிற உடை வாங்கிக்கொடுங்கள். மிதுனத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றும் செவ்வாய் நீசமானாலும்கூட, இந்தப் பரிகாரங்கள் ஓரளவுக்காவது லட்சியங்கள் நிறைவேற துணைசெய்யும். மிதுனத்தாருக்கு செவ்வாய் நீசமடைந்தால், வேலை விஷயமாக எப்போதும் எண்ணங்கள் தடைப்படும். இவ்விதம் உள்ளவர்கள், திருச்சி அருகே உள்ள திருத்தலையூர் அல்லது பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி ஆகிய ஊர்களிலுள்ள கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வணங்குங்கள். திருத்தலையூர்: ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வர பெருமான்.கல்பாத்தி: லட்சுமி நாராயணப் பெருமாள்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845